இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

0
28
Agreement signed between Sri Lanka and the United Arab Emirates!

பொருளாதார, முதலீட்டுத் தொடர்புகளைப் பலப்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உலக அரச உச்சி மாநாட்டையொட்டி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருந்த மூன்று நாள் விஜயத்துடன் இணைந்ததாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிதி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மொஹமட் பின் ஹாட் அல் ஹூசெதி மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இந்த இருதரப்பு ஒப்பந்தம், உலக சந்தைகளில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், வெளிநாடுகளில் முதலீடுகளைப் பாதுகாப்பாக மேற்கொள்வதற்கும் சட்ட வரைவொன்றை வழங்கும்.

முதலீட்டாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும், பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்தவும் விரிவான முதலீட்டு பாதுகாப்பு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நெறிமுறை மற்றும் கொள்கை வரைவு தயாரிப்பாளர்கள் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வசதிகளை வழங்குதல் என்பன இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களாகும்.

இந்த ஒப்பந்தம் உலக பொருளாதார கூட்டிணைவை வலுப்படுத்தும் அதேவேளை இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகளைத் தேடுவதற்கான வசதிகளையும் வழங்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் வர்த்தக மற்றும் வணிக வேலைத்திட்டங்களை வலுப்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மையான மற்றும் நிலையான முதலீட்டுச் சூழலை உருவாக்கவும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) ஊக்குவிப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.

அதேபோல் இந்த ஒப்பந்தம் புதிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தவும் அதனால் பொருளாதார முன்னேற்றத்துக்கும், புதிய வணிக வாய்ப்புக்களை உருவாக்கவும் வழிவகுக்கும்.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால தொடர்புகளை வலுப்படுத்தி நிலையான முதலீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் நிதி தொடர்புகளை மேம்படுத்தவும் வழிவகுப்பதாக இது அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here