காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் அழுத்தம்

0
86
US President Biden presses for urgent ceasefire in Gaza

கட்டாரில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் உச்ச கட்டத்தைத் தொட்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காசாவில் போர் நிறுத்தம் மற்றும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது அவசர தேவையாக உள்ளது என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால் டிரம்ப் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ள நிலையில், அதற்கு முன்னர் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே பைடன் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்
.
கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஈடுபட்டு வருவதுடன், பல தடவைகள் உடன்பாடு ஒன்றை எட்டுவது நெருங்கிவந்த நிலையில் அது தோல்வியை தழுவியது.

இந்நிலையில் அண்மைய நாட்களில் கட்டார் தலைநகரில் போர் நிறுத்தப் பேச்சுகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட்டின் தலைவர் டேவிட் பார்னி தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாரை சென்றடைந்தது.

அதேபோன்று பைடனின் மத்திய கிழக்கு ஆலோசகர் பிரெட் மக்கர்க்கும் இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
இதில் இரு தரப்புக்கும் முன்வைப்பதற்கான இறுதிக் கட்ட ஆவணத்தை தயாரிக்கும் பணியில் மக்கர்க் ஈடுபட்டிருப்பதாக பைடனின் பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவன் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் உடன்பாடு ஒன்று எட்டப்படுவது குறித்து எதிர்வுகூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் அழிவை ஏற்படுத்தி இருக்கும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் முழுமையாக வாபஸ் பெறுவதை ஹமாஸ் அமைப்பு வலியுறுத்துகிறது மறுபுறம் காசாவில் ஹமாஸின் போர் புரியும் திறனை முழுமையாக ஒழிப்பதில் நெதன்யாகு தொடர்ந்து உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் போர் நிறுத்த உடன்படிக்கையின் முதல் கட்டத்தில் விடுவிக்கப்படும் பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பலஸ்தீன கைதிகள் அதேபோன்று காசாவில் மக்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறும் விவகாரங்கள் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றன.

ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள டிரம்பின் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்கொப் நெதன்யாகுவை சந்தித்து பேசியதோடு போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன அதிகாரிகள் கூறி வருகின்றபோதும் அது தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.

பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றபோதும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் எந்தத் தணிவும் ஏற்படவில்லை.

காசா நகரில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் சலாஹ் அல் தீன் பாடசாலை மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 19 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 46,584 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 109,731 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here