முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பகுதியில் பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அபகரித்து வைத்திருப்பதால் அதனை மீட்டுத்தரக்கோரி இன்று (27) காலை பாடசாலை சமூகத்தினர், ஊர் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
யுத்த காலத்துக்கு முன்னர் நீண்டகாலமாக பாடசாலை இயங்கிவந்த காணியை யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றம் வந்தபோது தனியார் ஒருவர் இந்த பாடசாலை காணியினை அபகரித்து பாடசாலை அடையாளங்களை அழித்து வீடு ஒன்றை அமைத்துள்ளார்.
அப்போதைய அரசியல் சூழல் காரணமாக போராடி குறித்த காணியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பின்னர் உரிய முறைப்படி பிரதேச செயலக அதிகாரிகளை அணுகி அவர்கள் ஊடாகவும் குறித்த தனிநபரை வெளியேற்ற முடியாத நிலையில், பாடசாலை அமைந்திருந்த காணிக்கு அருகாமையில் காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊர்மக்கள், பாடசாலை சமூகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்திற்கான தீர்வுகள் கிடைக்கப்பெறாத நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களை இடைநிறுத்தி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




