அமெரிக்காவின் வரி விதிப்பினால் இலங்கைக்கு பொருளாதார சுனாமி ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உலக நாடுகள் மீதான வரிகளை அறிவித்தார். நாம் அமெரிக்கப் பொருட்களுக்கு 88 வீத வரி விதித்ததால் எம்மீது 44 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என அரசாங்கம் அறிந்திருந்தும், அது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்து யோசனைகளை முன்வைத்த போதும் அவற்றுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.
வரி விதிப்பு குறித்து உலக நாடுகள் அமெரிக்காவோடு பேசி வருகின்றன. நமது நாடு இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் 40 வீதமானவை அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக மூன்று இலட்சத்து 50 ஆயிரம் நேரடி வேலைகளையும் 1 மில்லியன் மறைமுக வேலைகளையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று அவர்களது தொழில்கள் ஆபத்தில் காணப்படுகின்றன. இந்த தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளனர்
இந்த வரிகளால் ஆடைத் தொழில் சரிந்தால் பொருளாதார சுனாமி ஏற்படும்.
நரேந்திர மோடியைச் சந்தித்தபோதும், நமது நாட்டு உற்ப்பத்திப் பொருட்களுக்கு இந்தியச் சந்தை வாய்ப்பை மேலும் விரிவுபடுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தேன்.



